ஓரின சேர்க்கைக்கு அழைத்து டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு
ஓரின சேர்க்கைக்கு அழைத்து டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு
வீரபாண்டி
திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயம் பஸ் நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகுரு (வயது 28). டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் தனது செல்போனில் புதிய ஆப் ஒன்றை டவுன் லோட் செய்து அதில் சில வாலிபர்களுடன் பேசி வந்ததாக தெரிகிறது. அந்த ஆப் மூலமாக 19 வயது வாலிபர் ஒருவர், பாலகுருவை தொடர்பு கொண்டு ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. பாலகுருவும் ஓரின சேர்க்கையில் ஈடுபட விருப்பம் தெரிவித்ததால், அந்த வாலிபர் திருப்பூர் செல்லம் நகர் பகுதியில் இருந்து பாரப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள காலி இடத்திற்கு வருமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பாலகுரு அந்த இடத்திற்கு சென்றார். அப்போது அங்கு அந்த 19 வயது வாலிபருடன் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 5 பேரும் பாலகுருவை சரமாரியாக தாக்கிவிட்டு அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்து பாலகுரு திருப்பூர் மத்திய போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பணம், செல்போனை பறித்துச் சென்றது திருப்பூர் பகுதியை சேர்ந்த சாரதி(வயது19), கவுதம்(19), மவுலி(19) உள்பட 5 பேர் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். ஓரின சேர்க்கைக்கு அழைத்து நூதன முறையில் பணம் மற்றும் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.