பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறித்தவரை பிடிக்க 3 தனிப்படை
பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறித்தவரை பிடிக்க 3 தனிப்படை
மூலனூர்:
மூலனூர் அருகே பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறித்தவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நகை பறிப்பு
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
மூலனூர் சக்கரவலசு கல்லாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்த வளர்மதியிடம் மர்ம ஆசாமி ஒருவர் சம்பவத்தன்று கத்தியை காட்டி மிரட்டி 7 பவுன்நகையை பறித்து சென்றார். இது குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறிப்பில் ஈடுபட்ட ஆசாமி குறித்து விசாரித்தனர். விசாரணையில் நகைப்பறிப்பில் ஈடுபட்டவர் நிலக்கோட்டை பட்டிவீரன்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் ராஜா என்ற முருகவேல் (வயது 45) என்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர் என்றும் தெரியவந்தது. முருகவேல் குறித்து போலீசார் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி போலீஸ் நிலைய பகுதியில் வழக்கு ஒன்றில் முருகவேலை கைது செய்த போலீசார் அவரை கடந்த 13-ந் தேதி அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு கடலூர் சிறைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிய முருகவேல் அங்கு இருசக்கர வாகனத்தை திருடி, வெள்ளகோவில் பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் வெள்ளகோவில் பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அன்று மாலை 4 மணிக்கு ஊதியூர் பகுதியில் நகை பறிப்பு சம்பவத்திலும், அதை தொடர்ந்து சக்கரவலசு பகுதியில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகையை பறித்து சென்று இருப்பதாகவும், இவர் மீது 50 நகைப்பறிப்பு வழக்குகள் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்
இவர் தனியாக நடந்து வரும் பெண்கள், வாகனங்களில் வரும் பெண்களை தாக்கி அவர்களிடமிருந்து நகையை பறிப்பதில் கில்லாடி. இந்த ஆசாமி மூலனூர் பகுதியில் சுற்றி திரிந்தால் நகை பறிப்பில் ஈடுபடக்கூடும். எனவே மூலனூர், கன்னிவாடி, விளாம்பட்டி, நஞ்சைதலையூர், மாம்பாடி, டி. குமாரபாளையம், எரசினம் பாளையம், ஊத்தூர், பொன்னிவாடி, எலுகாம் வலசு, நீலாங்காளி வலசு பகுதி பொதுமக்கள் விழிப்புடன் இருக்க போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர். இதையடுத்து தலைமறைவாக உள்ள முருகவேலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முருகவேல் குறித்து புகைப்படம் மூலனூர் பகுதியில் போலீசார் சார்பில் ஒட்டப்பட்டுள்ளது.