சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச வாலிபர்கள் 10 பேர் கைது
சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச வாலிபர்கள் 10 பேர் கைது
வீரபாண்டி:
திருப்பூர் வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நொச்சிபாளையம் பிரிவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக நடந்து சென்ற சிலரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது போலீசாரை கண்டதும் சிலர் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை சுற்றி வளைத்துப்பிடித்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றும் தெரிய வந்தது. பின்பு அவர்களை வீரபாண்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், சட்டவிரோதமாக திருப்பூர் மற்றும் நொச்சிபாளையம் பகுதிகளில் பல நாட்களாக தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு உத்தரவின் பேரில் வங்க தேச நாட்டைச்சேர்ந்த முகமது ஆலமீன் (வயது 29), அஸ்ரபுல் (24) ஷுரிபுல் இஸ்லாம் (22), முகமது ஆரிப் (22), முகமது ஷயின் (22), குமோன் கபீர் (23), சாய்புல் (22), நஸ்ருவிஸ்லாம் (35), ஆலமீன் (19), நஸ்முல் (29) ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்பு சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.