செல்போன்களில் வரும் குறுந்தகவல்களை நம்பி வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்கக்கூடாது போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தல்
செல்போன்களில் வரும் போலியான குறுந்தகவல்களை நம்பி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தி உள்ளார்.
தர்மபுரி:
செல்போன்களில் வரும் போலியான குறுந்தகவல்களை நம்பி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை தெரிவிக்கக்கூடாது என்று தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் அறிவுறுத்தி உள்ளார்.
போலியான செயலிகள்
தர்மபுரி மாவட்டத்தில் சேமிப்பு கணக்குகளில் இருந்து செல்போன் மூலமாக போலியான செயலிகளை பயன்படுத்தி பணம் மோசடி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக வரும் புகார்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மோசடி செய்யப்பட்ட பணத்தை தொழில்நுட்ப உதவியுடன் மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் கூறியதாவது:-
போலியான செல்போன் செயலிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வங்கி சேமிப்பு கணக்குகளில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்களை தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இத்தகைய மோசடிகள் நடந்தால் உடனடியாக 1930 என்ற சைபர் கிரைம் எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஏமாறக்கூடாது
இதேபோல் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம். செல்போன்களுக்கு வரும் போலியான குறுந்தகவல்களை நம்பி வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண், ஓ.டி.பி. எண் உள்ளிட்ட விவரங்களை வாடிக்கையாளர்கள் தெரிவிக்கக்கூடாது.
செல்போன்கள் மூலம் வரும் லட்சக்கணக்கான ரூபாய் பரிசு வழங்குகிறோம், குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் என்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் ஏமாறக்கூடாது. இதுதொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.