வருமான சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு சிறை-கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு
வருமான சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
கிருஷ்ணகிரி:
மின் இணைப்புக்கு லஞ்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை அடுத்த கர்கனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. இவர் தனது நிலத்துக்கு மின் இணைப்பு பெறுவதற்காக, வருமான சான்று கேட்டு கிராம நிர்வாக அலுவலகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு விண்ணப்பித்தார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்த ராமன் வருமான சான்று வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் துரைசாமி லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதனால் அவர் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
ஓராண்டு சிறை
கடந்த 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி துரைசாமி, ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரம் பணத்தை கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்த ராமனிடம் கொடுத்தார். அவர் அதை பெற்றபோது, அங்கு பதுங்கி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராமனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி தலைமை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி ராஜசிம்மவர்மன் தீர்ப்பளித்தார். அவர், லஞ்சம் பெற்ற ராமனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.