நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிப்பு அணைகளின் நீர்மட்டம் மளமளவென குறைகிறது

நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால். மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது.

Update: 2022-03-15 15:56 GMT
ஊட்டி

நீலகிரியில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதால். மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் மளமளவென குறைந்து வருகிறது. 

13 அணைகள்  

நீலகிரி மாவட்டத்தில் மின்வாரியம் கட்டுப்பாட்டில் குந்தா, கெத்தை, அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, காமராஜ் சாகர், பைக்காரா, கிளன்மார்கன், மாயார், முக்கூருத்தி உள்பட 13 அணைகள் உள்ளன. இங்கு குந்தா, பைக்காரா நீர் மின் திட்டங்கள் மூலம் 12 மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நீலகிரியில் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. தினமும் 850 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

கடந்த ஆண்டு தென் மேற்கு, வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் அதிகரித்தது. 

நீர்மட்டம் குறைந்தது

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் அணைகளில் இருப்பில் இருந்த தண்ணீரை கொண்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. 

இதனால் சமவெளி பகுதிகளில் உள்ள வீடுகளில் ஏ.சி., மற்றும் மின்விசிறியின் பயன்பாடு அதிகரித்து உள்ளதுடன், தொழில் நிறுவனங்களில் மின் தேவையும் அதிகரித்து இருக்கிறது. 

இதை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக அணைகளில் இருந்து தண்ணீர் அதிகமாக எடுக்கப்படுகிறது.
 
இதனால் அணைகளில் நீர்மட்டம் மளமளவென குறைந்து உள்ளது. சில நீர்நிலைகள் வெட்ட வெளியாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக எமரால்டு அணையின் நீர்தேக்க பகுதி தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

கூடுதலாக 110 மெகாவாட்

நீலகிரியில் தினமும் 850 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது கோடைகாலம் தொடங்கியதால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மின் தேவை அதிகரித்ததால் தினமும் கூடுதலாக 110 மெகாவாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு தினமும் 960 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

வருகிற ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக்கு முன்னர் அணைகளில் தேக்கி வைத்த தண்ணீர் மூலம் மின் உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. முடிவில் தண்ணீர் விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டுக்காக பவானிசாகர் அணையை சென்றடைகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்