மோட்டார் சைக்கிள் வேன் மோதல் 2 வாலிபர்கள் பலி

திருக்கோவிலூர் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.

Update: 2022-03-15 15:01 GMT
திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்தவர்கள் சேகர் மகன் எழில்(வயது 28), பெரியான் மகன் தினேஷ்குமார்(25), மணி மகன் பிரகாஷ்(27). இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் திருக்கோவிலூர் நோக்கி புறப்பட்டனர்.  சாங்கியம் கிராமத்தில் சென்றபோது எதிரே வந்த வேனும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த எழில் சம்பவ இடத்திலேயே பலியானார். 

படுகாயமடைந்து உயிருக்கு போராடிய தினேஷ்குமார், பிரகாஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தினேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். 
இதையடுத்து பிரகாஷ், மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று எழிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்