வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு பழச்சாறு கொடுக்கும் பணி
வெயிலில் பணியாற்றும் போலீசாருக்கு பழச்சாறு கொடுக்கும் பணியை, தேனி போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று பகலில் தேனியில் 95 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. வெயிலை பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாருக்கு பழச்சாறு வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பழச்சாறு வழங்கும் பணியை தேனி நேரு சிலை சிக்னலில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர், அங்கு வெயிலில் நின்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கும் பழச்சாறு வழங்கினார்.
வருகிற ஜூன் மாதம் வரை தினமும் பகல் நேரத்தில் பழச்சாறு வழங்க வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயா ராஜலட்சுமி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தெட்சிணாமூர்த்தி மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.