தூத்துக்குடியில், ரூ.7,500 கோடியில் வெளித்துறைமுக விரிவாக்க திட்டம்:வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன்

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறினார்

Update: 2022-03-15 13:17 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி செலவில் வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் கூறினார்.
விளக்க கூட்டம்
பிரதம மந்திரி ‘கதி சக்தி' என்ற திட்டத்தில் 16 மத்திய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்து ரூ.100 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த உள்ளன. இந்த திட்டத்தின் கீ்ழ் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் துறைமுகம், விமான நிலையம், தெற்கு ரெயில்வே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கத்துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு, கதிசக்தி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினர். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அந்த துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறியதாவது:-
வெளித்துறைமுகம்
சரக்கு போக்குவரத்துக்கு நமது நாட்டில் 14 சதவீதம் செலவாகிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் வளர்ந்த நாடுகளில் 6 முதல் 9 சதவீதம் மட்டுமே செலவாகிறது. எனவே, இந்தியாவிலும் போக்குவரத்து செலவை 6 முதல் 9 சதவீதம் அளவுக்கு குறைக்கும் நோக்கத்தில் கதிசக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வ.உ.சி. துறைமுகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் ரூ.7 ஆயிரத்து 500 கோடி மதிப்பில் வெளித்துறைமுக விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில் புதிதாக 2 சரக்கு பெட்டக முனையங்கள் அமைக்கப்படுகின்றன. துறைமுக கப்பல் நுழைவு வாயில் பகுதியின் அகலம் 150 மீட்டரில் இருந்து 230 மீட்டராக அகலப்படுத்தப்படும். கப்பல் தளங்களின் தற்போதுள்ள மிதவை ஆழம் 16 மீட்டராக ஆழப்படுத்தப்படும்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
கடலோர வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை துறைமுகம் ஒதுக்கீடு செய்து உள்ளது. இதில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். மேலும் 5 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.42 கோடி செலவில் சரக்கு பெட்டகங்களை கண்காணிக்கும் ஸ்கேனிங் வசதி அமைக்கப்படுகிறது. ரூ.23 லட்சம் செலவில் மின்னணு ரெயில் எடை நிலையம் அமைக்கப்படுகிறது. 
பசுமை எரிசக்தி திட்டத்தின் கீழ் ஏற்கனவே ரூ.20 கோடியில் காற்றாலை திட்டமும், ரூ.22 கோடியில் சூரிய மின்சக்தி திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. மேலும் 100 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மற்றும் சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். தற்போது 3 மின்சார கார்கள் துறைமுக பயன்பாட்டில் உள்ளன. மேலும் 3 கார்கள் விரைவில் வர உள்ளன. மேலும், மின்சார கார்களுக்கு சார்ஜ் போடுவதற்காக தூத்துக்குடி பகுதியில் மூன்று இடங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே திட்டங்கள்
மதுரை தெற்கு ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் டி.ரமேஷ் பாபு கூறும்போது, ‘தூத்துக்குடி மீளவிட்டான்- மதுரை, மதுரை-நெல்லை இரட்டை ரெயில் பாதை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடையும். மேலும் பிரதான ரெயில் பாதை 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. மீளவிட்டான் முதல் துறைமுகம் வரையிலான 11 கிலோ மீட்டர் ரெயில் பாதையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
இந்திய போர்ட் ரெயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேசன் கூடுதல் பொதுமேலாளர் எம்.ரமேஷ்பாபு கூறும்போது, ‘துறைமுகங்களில் ரெயில்வே மூலம் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை மேம்படுத்துவதற்கான ரெயில்வே மற்றும் கப்பல் துறை அமைச்சகத்தின் கூட்டு நிறுவனம் தான் இந்திய போர்ட் ரெயில் மற்றும் ரோப்வே கார்ப்பரேசன். தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரெயில்களில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வசதிகளை எந்திரமயமாக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். துறைமுகம் அருகே உள்ள முயல் தீவில் அதற்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது’ என்றார்.
ரூ.4 ஆயிரத்து 70 கோடி வருவாய்
தூத்துக்குடி சுங்கத்துறை ஆணையர் திணேஷ் கே.சக்கரவர்த்தி கூறுகையில், ‘தூத்துக்குடி சுங்கத்துறை கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு வருவாய் இலக்கை எட்டி உள்ளது. இந்த ஆண்டு ரூ.4 ஆயிரத்து 70 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இலக்கை தாண்டி ரூ.300 கோடி அதிகமாக வருவாய் கிடைத்து உள்ளது. துறைமுகம் வழியாக சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை எளிமையாக்க சுங்கத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் துணை பொதுமேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் பி.சங்கர் கூறுகையில், ‘தூத்துக்குடி- மதுரை, தூத்துக்குடி- நெல்லை ஆகிய 2 தேசிய நெடுஞ்சாலைகள் மூலம் வ.உ.சி. துறைமுகம் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த 2 நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் பகுதியில் 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. மேலும், புதுக்கோட்டை பகுதியிலும், திருச்செந்தூர் ரவுண்டானா பகுதியிலும் 2 மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் விரைவில் முடிவடையும். இதேபோன்று தூத்துக்குடி- மதுரை சாலையில் 5 இடங்களிலும், தூத்துக்குடி- நெல்லை சாலையில் 3 இடங்களிலும் சுரங்கவழிப்பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது’ என்றார்.
கூட்டத்தில், துறைமுக துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, தலைமை பொறியாளர் கே.ரவிக்குமார், போக்குவரத்து மேலாளர் பிரபாகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்