நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

Update: 2022-03-15 11:50 GMT
திருவண்ணாமலை

பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.

நுகர்வோர் தினவிழா

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடந்தது. 

கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டாரவிதேஜா முன்னிலை வகித்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

இதில் திருவண்ணாமலை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், பொதுவினியோகத் திட்ட துணைப்பதிவாளர் ஆரோக்கியராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை. இந்த தினத்தின் முக்கிய நோக்கமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

 ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளதா? என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

 வெளிநாட்டவர்களுக்கு விழிப்புணர்வு உள்ளது. ஆனால் திருவண்ணாமலையை சேர்ந்த மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. ஏனென்றால் கிராமப்புற மக்கள் அதிகம் உள்ளனர். 

வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிமை என்ன உள்ளது என்பது குறித்து தெரிந்திருக்க வேண்டும். 

பொருட்கள் வாங்கும்போது அவை காலாவதியாகி விட்டதா?, தரமாக உள்ளதா? என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும். 

கேள்வி கேட்கும் உரிமை வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. ஏன்?, எதற்கு? என்ற கேள்வி மக்கள் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்பதே முதல் விழிப்புணர்வு ஆகும். 

பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் மற்றும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் நுகர்வோருக்கான உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கண்காட்சி

விழாவில் உணவு பாதுகாப்பு அலுவலர் கைலேஷ் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப்போட்டி, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. 

அந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவுப்பொருட்களில் கலப்படம் கண்டறிதல் தொடர்பான கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இதனை கலெக்டர் பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்