தூத்துக்குடியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 448 பெண் போலீசுக்கு பயிற்சி
தூத்துக்குடி அருகே பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 448 பெண் போலீசாருக்கான பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 448 பெண் போலீசாருக்கான பயிற்சியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தொடங்கி வைத்தார்.
போலீசாருக்கு பயிற்சி
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் 2020-ம் ஆண்டில் நடத்திய இரண்டாம் நிலை போலீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 448 ஆயுதப்படை பெண் போலீசாருக்கு பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக அவர்கள் நேற்று பயிற்சி பள்ளியில் சேர்ந்தனர்.
தொடர்ந்து அவர்களுக்கு பயிற்சிக்கான தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு போலீஸ் பயிற்சி பள்ளி துணை முதல்வர் அனிதா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.
மகிழ்ச்சி
அப்போது, புதிதாக போலீஸ் துறையில் பணியாற்ற காத்திருக்கும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன். மற்ற துறையை விட போலீஸ் துறை உங்களுக்கு மாறுபட்டதாக இருக்கும். முக்கிய பண்டிகை நாட்களில் நாம் பணி செய்ய வேண்டி இருக்கும். எனவே விடுப்பு கிடைக்கும் நாட்களில் நாம் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருந்து கொள்ள வேண்டும். இந்த பயிற்சி உங்களுக்கு கடினமாக இருந்தாலும் எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்’என்று கூறினார்.
நிகழ்ச்சியில் பயிற்சி பள்ளி முதன்மை சட்ட பயிற்சியாளர் ஜானிட்டர் பாபுனி, முதன்மை கவாத்து பயிற்சியாளர் பாஸ்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.