மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
சேலத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து முதியவர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 275 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். மேலும் 15 மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார். இதுதவிர இந்த கூட்டத்தில் ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், சக்கர நாற்காலி ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.