பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை சிவகாசி நகருக்குள் அனுமதிக்க கூடாது
சிவகாசியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதற்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
சிவகாசியில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் நகருக்குள் வருவதற்கு கட்டுபாடுகள் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
சிவகாசி நகரின் பல்வேறு இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நகருக்குள் ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் சரக்கு வாகனங்கள் வந்து, சென்ற நிலையில் தற்போது எப்போது வேண்டும் என்றாலும் சரக்கு வாகனங்கள் வந்து, செல்லும் நிலை தொடர்கிறது. இதனால் நகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகப்படியாக போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. ஏற்கனவே சிவகாசி நகர போக்குவரத்து பிரிவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் போலீசார் உள்ளனர். இவர்கள் அனைவரும் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்படுவதால் நகரின் கிழக்குபகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போதிய போலீசார் இல்லாத நிலை ஏற்படுகிறது.
கனரக வாகனங்கள்
குறிப்பாக காலை 7.30 மணி முதல் 9 மணி வரை நகர் பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வெளியிடங்களில் இருந்து மாணவர்கள் சைக்கிளில் வருகிறார்கள். இவர்கள் வரும் நேரத்தில் நகரப்பகுதியில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக காலை 7 மணிக்கு பின்னர் நகரப்பகுதிக்குள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை என்ற நிலை மாறி தற்போது 8 மணி வரை பஸ் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படுகிறது. இதுபோன்ற கனரக வாகனங்கள் செல்லும் போது கூடுதல் நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வராமல் இருக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரும்பு தடுப்பு கம்பி
சரக்குகளை இறக்க வரும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். கடந்த காலங்களை போல் காலை மற்றும் மாலை நேரங்களில் இரும்பு தடுப்பு கம்பிகளை முக்கிய வழிகளில் வைத்து கனரக வாகனங்கள் உள்ளே வராமல் செய்ய வேண்டும்.
நேற்று காலை 8.10 மணிக்கு நகருக்குள் வந்த சில கனரக வாகனங்களால் அம்பேத்கர்மணி மண்டபம் அருகில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆதலால் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை சிவகாசி நகருக்குள் அனுமதிக்க கூடாது என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.