காஞ்சிக்கோவில் அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்தது

காஞ்சிக்கோவில் அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Update: 2022-03-14 20:38 GMT
காஞ்சிக்கோவில் அரசு தொடக்கப்பள்ளி சமையல் அறையில் கியாஸ் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதில் பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது. 
சிலிண்டரில் தீ
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிக்கோவிலில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் குழந்தைகளுக்கு சத்துணவு சமைப்பதற்காக சமையல் பணியாளர்கள் கியாஸ் அடுப்பை பற்றவைத்தனர். அப்போது அடுப்பு எரியாததால் சிலிண்டரை அசைத்து பார்த்துள்ளனர். இதனால் கியாஸ் கசிந்துள்ளது. அப்போது அருகே எரிந்து கொண்டிருந்த விறகு அடுப்பின் தீக்கங்கு சிலிண்டாில் பட்டதால் திடீரென சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயந்துபோன சமையல் பணியாளர்கள் வெளியே ஓடிவந்தார்கள். பின்னர் உடனே இதுபற்றி பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சிலிண்டரில் பற்றி எரிந்த தீயை பத்திரமாக அணைத்தார்கள். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. 
அசம்பாவிதம் தவிர்ப்பு
தீயணைப்பு வீரர்கள் வரும் வரை சுமார் 30 நிமிடம் சிலிண்டர் தீப்பிடித்து எரிந்தது. நல்ல வேளையாக சிலிண்டர் வெடித்து சிதறவில்லை. அப்படி ஏதும் நடந்திருந்தால், ஏராளமான குழந்தைகள் பள்ளியில் இருந்த நிலையில் பெரும் அசம்பாவிதம் நடந்திருக்கும். அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீயை அணைத்த பின்னர், சத்துணவு பணியாளர்களிடம் தீயணைப்பு வீரர்கள், அடுப்பு எரியவில்லை என்றால் சிலிண்டரை அசைத்து, ஆட்டக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். 

மேலும் செய்திகள்