தஞ்சையில் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை மறித்து போலீசார் சோதனை
வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை வியாபாரிகள் எடுத்து வருகிறார்களா? என போலீசார் லாரிகளை மறித்து சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர்:
வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை வியாபாரிகள் எடுத்து வருகிறார்களா? என போலீசார் லாரிகளை மறித்து சோதனை நடத்தினர்.
நெல் விற்பனை
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் லாரிகளில் நெல்மூட்டைகளை கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனால் இங்குள்ள விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதில் சிரமம் எழுந்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுக்கும் வகையில், ட்ரான்ஸீட் படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
போலீசார் சோதனை
இந்த படிவங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் நெல் மூட்டைகள் அனைத்தும், உரிய ஆவணங்கள் இன்றி செல்வதாக கூறி அதனை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அதன்படி தஞ்சையில் நேற்று குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜய், ஏட்டுகள் செல்வராஜ், நிகிலா, வெற்றிவேல் ஆகியோர் மாரியம்மன்கோவில் பகுதியில் அதிரடியாக அவ்வழியே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரிகளை மடக்கி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அனைத்து லாரிகளிலும் ட்ரான்ஸீட் படிவங்கள் இருந்ததால், அவை அனுப்பி வைக்கப்பட்டது.