காரை ஏற்றி பூசாரி படுகொலை

அருப்புக்கோட்டை அருகே காரை ஏற்றி கோவில் பூசாரி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-14 20:11 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே காரை ஏற்றி கோவில் பூசாரி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் பூசாரி
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி வெள்ளையாபுரம் தெருவை சேர்ந்தவர் செந்தில்(வயது 46). கோவில் பூசாரி. செந்திலின் உறவுக்கார பெண்ணுடன், பந்தல்குடி லிங்காபுரத்தை சேர்ந்த பெத்துக்குமார்(27) என்பவர் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.  இதை அறிந்த செந்தில், திருமணமான பெண்ணிடம் எப்போதும் ஏன் பேசி கொண்டு இருக்கிறாய் என பெத்துக்குமாரை கண்டித்தார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்தநிலையில் நேற்று முன்தினம் கொப்புசித்தம்பட்டி விலக்கில் செந்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பெத்துக்குமார் வந்தார். அவர்கள் 2 பேருக்கும் இடையே அந்த பெண் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. 
ேமலும் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செந்தில் பந்தல்குடி போலீசில் புகார் அளிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் போலீஸ் நிலையம் சென்றுள்ளார். 
வாக்குவாதம்
போலீசில் புகார் அளித்தால் சிக்கலாகி விடும் என கருதிய பெத்துக்குமார், இதுபற்றி அவரது தம்பி விஜயகுமார்(25), தாயார் விஜயலட்சுமி மற்றும் நண்பர்கள் பாண்டியராஜன்(28), ராஜபாண்டி(27), கோபிநாதன்(26) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். 
இதையடுத்து ஒரு காரில் பெத்துக்குமார், விஜயகுமார், விஜயலட்சுமி உள்பட 6 பேரும் போலீஸ் நிலையம் சென்ற பூசாரி செந்திலை மடக்கி பிடிக்க சென்றனர். அவர் போலீஸ் நிலையம் செல்வதற்கு முன்பு வழிமறித்தனர். அப்போது அவர்கள் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
காரை ஏற்றினார்
அவர்கள் 6 பேரும் சேர்ந்து செந்திலை தாக்கினர். இதையடுத்து அவர் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ெசல்ல முயன்றார். அப்போது பெத்துக்குமார் காரில் ஏறி அவரை நோக்கி வேகமாக ஓட்டினார். இதில் செந்தில் மீது கார் ஏறியதால் பலத்த காயம் அடைந்தார். 
நடுரோட்டில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
6 பேர் கைது
இந்த சம்பவம் குறித்து செந்தில் மகன் சூர்யா அளித்த புகாரின் பேரில் பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த 6 பேரையும் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொப்புசித்தம்பட்டி விலக்கு அருகே பதுங்கி இருந்த பெத்துக்குமார், விஜயகுமார், விஜயலட்சுமி மற்றும் நண்பர்கள் பாண்டியராஜன், ராஜபாண்டி, கோபிநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெத்துக்குமார், விஜயலட்சுமி ஆகியோர் காயம் அடைந்து இருந்ததால் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
காரை ஏற்றி கோவில் பூசாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அருப்புக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்