மிலிட்டரி கேண்டீனில் முன்னாள் ராணுவத்தினர் முற்றுகை
முறையாக பொருட்கள் வினியோகம் செய்யக்கோரி மிலிட்டரி கேண்டீனில் முன்னாள் ராணுவத்தினர் முற்றுகையிட்டனர்.
விருதுநகர்,
விருதுநகர் கல்லூரி சாலையில் முன்னாள் ராணுவத்தினருக்கான மிலிட்டரி கேண்டீன் உள்ளது. இங்கு முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகை விலையில் அனைத்து பொருட்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2 வருடங்களாக வரிசை எண்ணுடன் அட்டை வழங்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென இந்த முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொருட்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யாமல் திடீரென வினியோக முறையில் மாற்றம் செய்யப்பட்டதால் அனைவருக்கும் தேவைப்படும் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்படும் சூழலில் நேற்று மிலிட்டரி கேண்டீனில் பொருட்கள் வாங்க வந்த முன்னாள் ராணுவத்தினர் முற்றுகையில் ஈடுபட்டனர். ஏற்கனவே நடைமுறையில் இருந்த வரிசை எண்ணுடனான அட்டை வழங்கும் முறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.