சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-14 19:41 GMT
சுசீந்திரம், 
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் மாசி திருக்கல்யாண விழா நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தாணுமாலயசாமி கோவில்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாண விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா கடந்த 7-ம் தேதி தொடங்கியது. 
திருவிழாவையொட்டி தினமும் அறம் வளர்த்த நாயகி அம்மன் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். 
அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு
திருக்கல்யாண விழாவான நேற்று காலை 8 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனை பல்லக்கு வாகனத்தில் எழுந்தருளச் செய்து பறக்கையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் அம்மனுக்கு திரு மஞ்சள் நீராட்டும் வைபவம் நடந்தது. பின்னர், அம்மனை மண்டபத்தில் எழுந்தருளச் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பல்லக்கு வாகனத்தில் ஆசிரமம் கிராமத்திற்கு எடுத்து வந்து ஆசிரமம் சோழன்திட்டை அணைக்கட்டில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மாலையில் அறம் வளர்த்த நாயகி அம்மனை அலங்கரித்து தந்த பல்லக்கில் பூமாலை, தோரணம் கட்டி மேளதாளம் முழங்க ஆசிரமத்திலிருந்து வீதி வழியாக பக்தர்கள் வெற்றிலை, பூ, மாலை, திருமண பட்டு, மஞ்சள், குங்குமம், சீர்வரிசை பொருட்கள் அடங்கிய தாம்பூல தட்டுடன் ஊர்வலமாக தாணுமாலய சாமி கோவிலை வந்தடைந்தனர்.
திருக்கல்யாண விழா
இரவு 7.30 மணிக்கு மேல் அலங்கார மண்டபத்தில் வைத்து ரிஷப வாகனத்தில் மாப்பிள்ளை கோலத்தில் தாணுமாலயசாமி கையில் திருமாங்கல்யம் வைக்கப்பட்டு, கருட வாகனத்தில் திருமால் இருக்க அவரது முன்னிலையில் தாணுமாலயசாமி கையிலுள்ள திருமாங்கல்யம் வேதமந்திரங்கள் முழங்க, பெண்கள் குலவையிட அறம் வளர்த்த நாயகி அம்மன் கழுத்தில் கட்டப்பட்டது. திருமணம் முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக சந்தனம், குங்குமம் வெற்றிலை சுருள் ஆகியவை வழங்கப்பட்டது.
 சுசீந்திரம் தெய்வீக, இயல், இசை, நாடகச் சங்க உறுப்பினர்கள் சார்பில் பக்தர்களுக்கு  அன்னதானமும், அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த தம்பதிகள்  உமாமகேஸ்வரர் மற்றும் திருமால், அம்பாள் வீதி உலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் கோவில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்த சங்கத்தினரும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். 
ஆராட்டு விழா
இன்று (செவ்வாய் கிழமை) மாலையில் இந்திரன் தேர் என்ற சப்பரத்தில் ரத உற்சவம் நடக்கிறது. இரவு ஆராட்டு விழாவுடன் திருக்கல்யாண விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில், கண்காணிப்பாளர் சிவகுமார், மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்