50-க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட ரெயில் குண்டுவெடிப்பு சம்பவம்
50-க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட ரெயில் குண்டுவெடிப்பு சம்பவம் 35 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நடந்தது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் பல வரலாற்று பதிவுகளை தன்னுள் கொண்டுள்ளது. அதில் ஒன்று அரியலூரில் நடந்த ரெயில் விபத்து. அதாவது கடந்த 1956-ம் ஆண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி புறப்பட்ட ரெயில் அரியலூர் பகுதியில் வந்தது. அந்த சமயத்தில் அதிகமாக பெய்த மழையின் காரணமாக அரியலூர் -சில்லக்குடி இடையே உள்ள மருதையாற்று பாலத்தில் அபாய அளவிற்கு மேல் தண்ணீர் சென்றதால், பாலம் அடித்துச் செல்லப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பாலத்தில் வந்த ரெயில் கவிழ்ந்தது.
இதில் ரெயிலில் பயணம் செய்த 300-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இது இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்துகளில் ஒன்றாகும். இந்த விபத்து சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று அப்போதைய ரெயில்வே மந்திரி லால்பகதூர் சாஸ்திரி தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்து சம்பவமே வரலாற்றில் அழியாத நிலையில் அதே பகுதியில் 31 ஆண்டுகள் கழித்து மற்றொரு ரெயில் பயணிகள் உயிரிழப்பு சம்பவமும் கரும்புள்ளியாக பதிவானது. ஆனால் இந்த முறை அது இயற்கை பேரிடரால் நிகழவில்லை. மாறாக பயங்கரவாதிகள் குண்டு வைத்து உயிரிழப்பை ஏற்படுத்தினர். இந்த பயங்கர சம்பவம் பற்றி கீழே காண்போம்.
மலைக்கோட்டை விரைவு ரெயில்
1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை விரைவு ெரயில் புறப்பட்டது. அரியலூருக்கு மறுநாள்(15-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு அந்த ரெயில் வந்து நின்றது. ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டும், ரெயிலில் வந்த பயணிகள் இறங்கிக்கொண்டும் இருந்தனர்.
சிறிது நேரத்தில் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய ஊழியர், மருதையாற்று பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இதனால் பதற்றமடைந்த ரெயில்வே ஊழியர்கள், மலைக்கோட்டை விரைவு ரெயிலை நிறுத்தும் நோக்கில் நடைமேடைக்கு ஓடி வந்தனர். ஆனால் அந்த ரெயில் புறப்பட்டு சென்ற சில நொடிகள் ஆகியிருந்தன. செல்போன் போன்ற நவீன வசதிகள் இல்லாத அந்த காலத்தில் அவர்களால் உடனடியாக என்ஜின் டிரைவரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க இயலவில்லை. இதனால் அடுத்து என்ன நடக்குமோ? என்ற பதைபதைப்புடன் அவர்கள் இருந்தனர்.
பயங்கர சத்தம்
அதே நேரத்தில் அந்த அதிகாலை வேளையில் வழக்கம்போல் கரும்புகையினை கக்கியபடி தடக்..., தடக்... சத்தத்துடன் மலைக்கோட்டை விரைவு ரெயில் அரியலூர்-சில்லக்குடி இடையே உள்ள மருதையாற்று பாலத்தில் வந்தது. அதிகாலை நேரம் என்பதாலும், சிறிது நேரத்தில் ஏற்பட உள்ள விபரீதம் பற்றி அறியாததாலும் அந்த ரெயிலில் பயணம் செய்த பல பயணிகள் உறக்கத்திலும், சிறிது நேரத்திற்கு முன்பு அரியலூர் ரெயில் நிலையத்தில் ஏறிய பயணிகள் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டும் இருந்தனர்.
அந்த சமயத்தில் மருதையாற்று பாலத்தின் மறுமுனையை என்ஜின் தொட்டபோது, திடீரென ‘டமார்’ என்ற பயங்கர சத்தம் கேட்டது. அடுத்த நொடி என்ஜின் தடம்புரண்டு பாலத்தின் அடியில் விழுந்தது. அதில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள், ஒன்றுடன் ஒன்று மோதியவாறும், சில பெட்டிகள் பாலத்தின் கீழ் தொங்கியவாறும் நின்றன. குறிப்பாக குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் நொறுங்கியிருந்தது. எங்கெங்கும் பயணிகளின் அபய குரலும், மரண ஓலமும் ஒலித்தன.
50-க்கும் மேற்பட்டோர் பலி
இருள்கலையாத நேரத்தில் என்ன நடந்தது என்று புரியாத நிலையில் குழப்பத்திலும், உயிரை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும் பெட்டிகளில் இருந்து சில பயணிகள் கீழே குதித்தனர். மொத்தத்தில் அப்பகுதி பதற்றமான நிலையில் காணப்பட்டது. சிறிது நேரத்தில் பொழுது புலர்ந்தநிலையில், ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து கிடந்ததை அறிந்து அங்கு வந்த போலீசார், அக்கம், பக்கத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இ்ந்த சம்பவத்தில் அந்த ரெயிலின் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணித்த 36 பேர் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரியலூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வெடிகுண்டு வைத்த பயங்கரவாதிகள்
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது அரியலூர் பகுதியில் 1980-ம் ஆண்டில் நக்சலைட் இயக்க பயங்ரவாதிகளில் அதிகமானவர்கள் தமிழர் விடுதலை படை என்ற அமைப்பை உருவாக்கினர். அதற்கு தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்ட நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்க மறுத்ததை கண்டித்தும், இதனால் கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக்கூடாது, தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும், எனவே தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்கள் இயக்கம் மற்றும் கோரிக்கையின்மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெடிகுண்டு வைத்து ரெயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர்.
அதன்படி தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் 1987-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி நள்ளிரவில் அரியலூர் -சில்லக்குடி இடையே மருதையாற்று ெரயில் பாலத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மின்வயரை இணைத்து, தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய காத்திருந்தனர்.
தகவல் தெரிந்தும் பயனில்லை
ஆனால் இந்த செயலில், அந்த இயக்கத்தை சேர்ந்த சிலருக்கு முரண்பாடு இருந்துள்ளது. இதனால் அந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர், அப்பாவி மக்கள் உயிரிழக்கக்கூடாது என்ற நோக்கில் அன்று நள்ளிரவு மருதையாற்றில் இருக்கும் ெரயில்வேக்கு சொந்தமான நீர் ஏற்றும் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அங்கிருந்த ஊழியரிடம், அந்த பாலத்தின் வழியாக ெரயில் வர வேண்டாம், அங்கு ரெயிலை கவிழ்க்க வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவித்துவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் உடனடியாக அரியலூர் ரெயில் நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் ரெயில் புறப்பட்டு சென்றுவிட்டது. இதைத்தொடர்ந்து அதிகாலையில் அந்த பாலத்தில் மலைக்கோட்டை விரைவு ரெயில் வந்தபோது, பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, தங்கள் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். குண்டு வெடித்த அதிர்ச்சியில் ரெயில் பெட்டிகள் கவிழ்ந்தன, என்பது தெரியவந்தது.
அழியாத சுவடுகள்
இந்தியாவிலேயே முதன்முதலில் பயங்கரவாதிகள், ரெயில் பாலத்தில் வெடிகுண்டை வெடிக்கச்செய்து பயணிகள் ரெயிலை கவிழ்த்து, அதில் அதிகமானவர்கள் இறந்தது இந்த சம்பவத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் நடந்து இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) 35 ஆண்டுகள் ஆன நிலையிலும், மறையாத சோகமாகவே உள்ளது. அரியலூரில் நடந்த மேற்கண்ட 2 சம்பவங்களும் காலத்தால் அழியாத சுவடுகளாக மாறிப்போனது என்றால் அது மிகையாகாது.
உயிர் தப்பியவர் பேட்டி
ரெயில் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அந்த ரெயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய அரியலூரை சேர்ந்த பூ வியாபாரி சாரங்கன் (வயது 80) கூறுகையில், அந்த காலத்தில் தினமும் அதிகாலையில் அந்த ரெயிலில் அரியலூரில் இருந்து ஸ்ரீரங்கம் சென்று பூக்கள் வாங்கி வருவது வழக்கம். அதன்படி அன்றும் நான் பூ வாங்க செல்வதற்காக அந்த ரெயிலில் பயணம் செய்தேன். வழக்கமாக என்ஜினுக்கு அடுத்தாற்போல் உள்ள முன்பதிவில்லா பெட்டியில் நான் பயணம் செய்வது வழக்கம். ஆனால் அன்று அந்த பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், கடைசியாக உள்ள முன்பதிவில்லா பெட்டியில் ஏறி பயணம் செய்தேன். மருதையாற்று பாலத்தில் சென்றபோது பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. மேலும் ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. அப்போது ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி லேசாக காயமடைந்த நிலையில் நான் மயக்கமடைந்தேன். பின்னர் நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, ரெயில் பெட்டிகள் அலங்கோலமாக கிடந்தன. எங்கும் அழுகுரலும், காப்பாற்றுங்கள்..., காப்பாற்றுங்கள்... என்ற அபயகுரலும் கேட்டவாறு இருந்தது. இதையடுத்து போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் எங்களை மீட்டு அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று குணமடைந்தேன். இன்று நினைத்தாலும், அந்த சம்பவம் எனது நெஞ்சை பதைபதைக்கச் செய்வதாக உள்ளது, என்றார்.