வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி

வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை மாணவர்கள் பார்வையிட்டனர்.

Update: 2022-03-14 19:31 GMT
பெரம்பலூர்:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் விழாவினை சிறப்பிக்கும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மாணவ-மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் செல்லும் வகையில், கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதி சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனம் பெரம்பலூர் மாவட்டத்துக்கு நேற்று வந்தது. பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தை கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
கண்காட்சி வாகனத்தில் இருந்த வ.உ.சி.யின் உருவச்சிலைக்கு கலெக்டர், எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் அம்பிகா, அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கண்காட்சி வாகனத்தில் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். இதைத்தொடர்ந்து அந்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனம் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி பெரம்பலூர், எளம்பலூர், குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இதில், வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அந்த வாகனம் மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளி, குன்னம் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்