பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் கிராமத்தில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரேகாமதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவியரசன், ஏட்டுகள் பாண்டியன், மணிமாறன், சிவக்குமார், சுந்தரபாண்டியன், குபேரன் ஆகியோர் ஏமப்பூர் கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகில் போடப்பட்டிருந்த கொட்டகையில் 30 சாக்கு மூட்டைகளில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், இந்த அரிசி மூட்டைகளை விழுப்புரம் வண்டிமேட்டை சேர்ந்த முபாரக் அலி என்பவர் ஏமப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் முபாரக்அலி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.