பஸ் வராததால் கிராம மக்கள் முற்றுகை

குறித்த நேரத்திற்கு பஸ் வராததால் கிராம மக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2022-03-14 18:00 GMT
திருப்புவனம், 
திருப்புவனம் யூனியனை சேர்ந்தது சொக்கநாதிருப்பு கிராமம். இந்தக் கிராமத்திற்கு மதுரை பெரியார் நிலையத்தில் இருந்து தெப்பக்குளம், சிலைமான், திருப்புவனம், அல்லிநகரம் வழியாக சொக்கநாதிருப்புக்கு தினமும் 6 தடவைகள் திருப்புவனம் டெப்போவில் இருந்து அரசு நகர் பஸ்சென்று வருகிறது. இதேபோல் மதுரை பொன்மேனி டெப்போவில் இருந்து ஒரு நகர் பஸ், சிவகங்கை டெப்போவில் இருந்து ஒரு நகர் பஸ்சும் சொக்கநாதிருப்பு கிராமத்திற்கு வந்து செல்கிறது. காலை நேரத்தில் வரும் பஸ்சில் சொக்கநாதிருப்பில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளும், மதுரையில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் மற்றும் வேலைக்கு செல்பவர்களும் தினசரி சென்று வருகின்றனர்.  மாலையில 3.45 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் பஸ்சில் கல்லூரி மாணவ- மாணவிகளும், அல்லிநகரம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளும் பயணம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 மாதங்களாக பஸ்கள் சொக்கநாதிருப்பு கிராமத்திற்கு குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை குறித்த நேரத்தை கடந்து வந்த அரசு டவுன் பஸ்சை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து பழையனூர் போலீசாரும், டெப்போ அதிகாரிகளும் வந்து கிராம மக்களிடம் பேசி குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். பின்பு அரசு டவுன் பஸ் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்