கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 305 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதல்-அமைச்சரின் பசுமை வீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 260 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் ஸ்ரீதர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கொடுத்து மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருந்த இருக்கைக்கு கலெக்டர் ஸ்ரீதர் நேராக சென்று 45 பேரிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ரூ.78 ஆயித்து 500 மதிப்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கினார். கூட்டத்தில் தனித்துணை கலெக்டர்கள் சமூக (பாதுகாப்பு) ராஜாமணி, ராஜவேல் (நிலம் எடுப்பு), மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்பிரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.