திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம்
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை)நடக்கிறது இதையொட்டி திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
திருவாரூர்;
திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை)நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது.
தியாகராஜர் கோவில்
திருவாரூர் தியாகராஜர் கோவில், சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கும் தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலின் ஆழித்தேர், ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமையை பெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர விழாவையொட்டி ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். 96 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் ஆழித்தேர் திருவாரூர் நகர வீதிகளில் அசைந்தாடி வரும் அழகு காண்போரின் மனதை கொள்ளை கொள்ளும். ஆழித்தேரை சீராக இயக்க திருச்சி பெல் நிறுவனம் மூலம் இரும்பு அச்சு மற்றும் 4 இரும்பு சக்கரங்களிலும் ‘ஹைட்ராலிக் பிரேக்’ பொருத்தப்பட்டுள்ளது.
இன்று தேரோட்டம்
ஆழித்தேரின் முன்பகுதியில் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரின் மொத்த எடை 300 டன் ஆகும். திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேராட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 8.10 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு தொடங்குகிறது.
அத்துடன் அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களும் வடம் பிடிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அதிகாலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டு ஆழித்தேரின் முன்பு இந்த தேர்கள் கொண்டு வந்து நிறுத்தப்படும்.
ஏற்பாடுகள்
ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் நகராட்சி மூலம் பக்தர்கள் வசதிக்காக நகரின் முக்கிய இடங்கள் மற்றும் தேரோடும் வீதிகளில் குடிநீர் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் நிரந்தர மற்றும் தற்காலிக கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
தேரோடும் வீதிகள் மற்றும் முக்கிய பொது மக்கள் கூடும் அனைத்து பகுதிகளிலும் 270 துப்புரவு பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு வாகனம் தேருக்கு பின்னால் தொடர தயார் நிலையில் உள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனம், நடமாடும் மருத்துவ வாகனத்தில் டாக்டர், செவிலியர்கள்மற்றும் மருந்துக்கள் அடங்கிய குழு தயாராக தேரை பின் தொடர்ந்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2000 போலீசார் பாதுகாப்பு
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சங்கிலி பறிப்பு, திருட்டு போன்ற சம்பங்களை தடுத்திட சாதாரண உடையில் போலீசார் கண்காணிக்கின்றனர். மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாமல் தடுத்திட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டத்தையொட்டி திருவாரூர் நகரம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகமும் சிறப்பாக செய்துள்ளது.