சிதம்பரத்தில் அனுமதியின்றி தெருவடைச்சான் ஊர்வலம் 10 தீட்சிதர்கள் மீது வழக்கு
சிதம்பரத்தில் அனுமதியின்றி தெருவடைச்சான் ஊர்வலம் நடந்ததாகவும், கண்காணிப்பு கேமரா கேபிளை அறுத்ததாகவும் 10 தீட்சிதர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்
சிதம்பரம்
நடராஜர் கோவில்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்குள்ள வடக்கு கோபுரம் அருகே பாண்டிய நாயக்கர் என்கிற முருகப்பெருமான் சன்னதி உள்ளது.
இந்த கோவிலில் பங்குனி உத்திரத்திருவிழா கடந்த புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, மாலை இருவேளையிலும் நான்கு முக்கிய வீதிகளில் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
தெருவடைச்சான்
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 5 நாள் விழாவில் தெருவடைச்சான் உற்சவம் நடந்தது. அப்போது கீழ சன்னதியில் இருந்து தெருவடைச்சான் ஊர்வலமாக இரவு 11 மணிக்கு தெற்கு வீதிக்கு வந்தபோது அந்த வழியாக சென்ற போலீஸ் கண்காணிப்பு கேமராவுக்கான கேபிள், தெருவடைச்சான் செல்வதற்கு தடையாக இருந்தது.
இதையடுத்து தீட்சிதர்கள் அந்த கேபிளை எந்த அனுமதியும் இல்லாமல், அறுத்தனர். பின்னர் தெருவடைச்சான் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
10 பேர் மீது வழக்கு
அப்போது அங்கு பணியில் இருந்த சிதம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தீட்சிதர்களிடம் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தெருவடைச்சான் ஊர்வலம் நடத்துகிறீர்கள்?, அனுமதி இல்லாமல் கேபிளை எப்படி அறுக்கலாம்? என்று கேட்டு அவர்களை எச்சரித்தனர். மேலும் இது தொடர்பாக தீட்சிதர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிதம்பரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.