முதுமலையில் தீ பரவாமல் இருக்க நவீன எந்திரம் உதவியுடன் காய்ந்த சருகுகள் அகற்றம்

முதுமலையில் தீ பரவாமல் தடுக்க நவீன எந்திரம் உதவியுடன் காய்ந்த சருகுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

Update: 2022-03-14 16:38 GMT
கூடலூர்

முதுமலையில் தீ பரவாமல் தடுக்க நவீன எந்திரம் உதவியுடன் காய்ந்த சருகுகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

கடும் வறட்சி 

முதுமலை புலிகள் காப்பகத்தில் மைசூரு தேசிய நெடுஞ்சாலை, மசினகுடி வழியாக ஊட்டிக்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் காப்பகம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது. 

இந்த நிலையில் முதுமலையில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. 
இதனால் வனப்பகுதியில் தீப்பிடிப்பதை தடுக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

சாலையோரம் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதுடன், சாலையில் இருந்து 6 மீட்டர் அகல தூரத்தில் புதர்கள் மற்றும் காய்ந்த சருகுகள் அகற்றும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
 
சருகுகள் அகற்றம்

வனப்பகுதியில் தேக்கு உள்ளிட்ட மரங்கள் அதிகமாக இருப்பதால் அதில் இருந்து உதிரும் சருகுகள் எளிதில் தீப்பிடிக்கக்கூடியவை. இந்த சருகுகளை கைகளால் அகற்றுவது சிரமமானது என்பதால், அந்த சருகுகளை ஏர்பிளோர் என்ற நவீன எந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. 

குறிப்பாக சாலையோரத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகளில் காய்ந்த சருகுகளை அகற்றும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

தீப்பிடிக்க வாய்ப்பு இல்லை

தீத்தடுப்பு கோடுகள் என்பது செயற்கையாக தீ பற்ற வைக்கப்படும். குறிப்பிட்ட தூரம் தீ எரிந்ததும் அணைக்கப்படும். சாலையின் இருபுறமும் இதுபோன்ற பணி நடைபெற்று வருகிறது. 

செயற்கையாக தீ வைத்த இடங்களில் மீண்டும் தீ பிடிக்க வாய்ப்பு இல்லை.  வனப்பகுதிக்குள் செல்லும் சாலைகளின் கரையோரம் காய்ந்த சருகுகள் அதிகளவு காணப்படுகிறது. ஏர்பிளோர் எந்திரம் மூலம் அகற்றுவதால் விரைவில் அகற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்