காதல் தோல்வி காரணமாக செல்போன் டவர் ஊழியர் தற்கொலை

காதல் தோல்வி காரணமாக செல்போன் டவர் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2022-03-14 16:35 GMT
குன்னூர்

காதல் தோல்வி காரணமாக செல்போன் டவர் ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.  அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

செல்போன் டவர் ஊழியர்

குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜ். இவரது மகன் கோபிநாதன் (வயது 25) இவர் செல்போன் டவர் பராமரிக்கும் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் அதேப்பகுதியை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். 

2 பேரும் கடந்த 6 ஆண்டாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்ததாக தெரிகிறது. அவர்கள் தினமும் செல்போனில் நீண்ட நேரம் பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோபிநாதனுடன் அவருடைய காதலி சரியாக பேசுவது இல்லை என்றும் அவர் வேறு ஒரு நபரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. 

தூக்குப்போட்டு தற்கொலை

இதையடுத்து அவர் தனது காதலியின் வீட்டிற்கு சென்று ஏன் என்னிடம் பேசுவது இல்லை என்று கேட்டு உள்ளார். அதற்கு காதலியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோபிநாதனை மிரட்டியதுடன், அவர் இனிமேல் உன்னுடன் பேசவும் மாட்டார், அவரை நீ மறந்துவிடு என்று கூறியதாக தெரிகிறது. 

இதனால் மனம் உடைந்த கோபிநாதன் அருவங்காட்டில் உள்ள செல் போன் டவரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கோபிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

கடிதம் சிக்கியது 

மேலும் கோபிநாதன் எழுதிய கடிதமும் சிக்கி உள்ளது. அதில், நான் எனது காதலியை உயிருக்கு உயிராக காதலித்து வந்தேன். ஆனால் அவர் என்னை தூக்கி எறிந்துவிட்டு மற்றொருவரை காதலிக்கிறார். 

தற்போது எனது காதலி 2 பேருடன் சேர்ந்து என்னை மிரட்டவும் செய்கிறார். எனவே எனது சாவுக்கு எனது காதலியின் குடும்பத்தினர்தான் காரணம். எனவே அவர் களை சும்மா விடக்கூடாது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

இந்த நிலையில் கோபிநாதனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காதலியின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். 

அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கோபிநாதனின் உடலை வாங்கிச்சென்றனர். மேலும் இது குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்