தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிக்கு கூடலூரை சேர்ந்த வீரர் தகுதி
தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டிக்கு கூடலூரை சேர்ந்த வீரர் தகுதி பெற்றார்.
ஊட்டி
தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் சார்பில், மாநில அளவிலான தடகள போட்டிகள் சென்னையில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பொன்னானி பகுதியை சேர்ந்த பிரியதாஸ் கலந்துகொண்டு, ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் 2-ம் இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தொடர்ந்து அவருக்கு பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. மாநில அளவிலான போட்டியில் 2-வது இடம் பிடித்ததன் மூலம் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார். ஒடிசாவில் வருகிற 27, 28-ந் தேதிகளில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.
இந்தநிலையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்துக்கு கலெக்டர் எஸ்.பி.அம்ரித்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற பிரியதாஸ் வந்தார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி கூறும்போது, நீலகிரியில் மாற்றுத்திறனாளிகள் தடகள பயிற்சி பெற போதிய வசதி இல்லை. இதனால் நான் கோவைக்கு சென்று பயிற்சி பெற்று வருகிறேன். ஊட்டியில் பயிற்சி வசதி ஏற்படுத்தி, நிதியுதவி செய்ய வேண்டும் என்றார்.