பைக்காரா அணையில் தற்காலிக நடைபாதை அமைப்பு
நீர்மட்டம் குறைந்ததால் படகு சவாரி செய்ய வசதியாக பைக்காரா அணையில் தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி
நீர்மட்டம் குறைந்ததால் படகு சவாரி செய்ய வசதியாக பைக்காரா அணையில் தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
பைக்காரா அணை
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லம் செயல்பட்டு வருகிறது. பைக்காரா அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்காக 8 இருக்கைகள் கொண்ட 18 படகுகள், 10 இருக்கைகள் கொண்ட 3 படகுகள், 4 அதிவேக படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
படகு சவாரியின் போது அடர்ந்த வனப்பகுதி, அணையின் இயற்கை அழகு மற்றும் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். பைக்காரா நீர்மின் திட்டத்தின் கீழ் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது.
நீர்மட்டம் குறைந்தது
சமவெளி பகுதிகளில் கோடை காலம் தொடங்கி உள்ளதால் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் தினமும் தண்ணீர் எடுக்கப்படுவதால் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. கடந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்ததால் 100 அடி கொள்ளளவு கொண்ட பைக்காரா அணையில் நீர்மட்டம் 95 அடியாக உயர்ந்தது.
தற்போது 3 மாதங்களில் அணை நீர்மட்டம் 95 அடியில் இருந்து 37 அடியாக குறைந்து இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய நடந்து செல்லும் 137 படிக்கட்டுகள் கொண்ட நடைபாதை முழுவதும் வெளியே தெரிகிறது. அதன் கீழ் 15 அடி ஆழத்தில் தண்ணீர் உள்ளது.
தற்காலிக நடைபாதை
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சென்று வர தற்காலிக நடைபாதை அமைக்கப்பட்டு, சுற்றிலும் பிடிமானத்துக்காக கம்புகள் பொருத்தப்பட்டது. அந்த வழியாக மிதவை பகுதிக்கு சென்று மோட்டார் படகுகளில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 8 ஆண்டுகளுக்கு பின்னர் பைக்காரா அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. தினமும் 4 அடி நீர்மட்டத்துக்கு தண்ணீர் எடுக்கப் பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது.
இதே நிலை தொடர்ந்தால் படகு சவாரி செய்வது கேள்விக்குறியாக உள்ளது. ஆழமான அணையின் நடுவே தொடர்ந்து படகு சவாரி மேற்கொள்ளப் படுகிறது. மழை பெய்தால் மட்டுமே அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது என்றனர்.