ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை

துடியலூர் அருகே மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவரது தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

Update: 2022-03-14 14:49 GMT
துடியலூர்

துடியலூர் அருகே மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக அவரது தந்தை போலீசில் சரண் அடைந்தார்.

குடிபோதையில் தகராறு

கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பூங்கா நகரை சேர்ந்தவர் முகமது ரபீக்(வயது 50). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22). ஆட்டோ டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் தினமும் மது குடித்துவிட்டு தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ஷாஜகான் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அங்கு தூங்கி கொண்டு இருந்த தனது தாய் உமேராவை எழுப்பி மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாஜகான், உமேராவிடம் தகராறில் ஈடுபட்டார்.

குத்திக்கொலை

இதை கண்ட தந்தை முகமது ரபீக், அவரை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த முகமது ரபீக், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ஷாஜகானின் வயிறு, முதுகு ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார்.  தொடர்ந்து சிறிது நேரத்திலேயே ஷாஜகான் பரிதாபமாக உயிரிழந்தார். உடனே முகமது ரபீக், துடியலூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கொலை வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர்.

பரபரப்பு

மேலும் அவரது வீட்டுக்கு சென்று ஷாஜகானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடந்த முதற்கட்ட விசாரணையில், கொலை ெசய்யப்பட்ட ஷாஜகான் மீது கோவை பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும், ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.  இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்