திருத்தணியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் மாற்றுத்திறன் படைத்த பள்ளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நேற்று திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமில் 18 வயது வரையுள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாற்றத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் பலரும், உரிய ஆவணங்களுடன், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர், இந்த மருத்துவ முகாமில், கண், காது, மூக்கு, தொண்டை நிபுணர், முடநீக்கியல் டாக்டர், குழந்தைகள் நல டாக்டர், நரம்பியல், மனநலம், உளவியல் நிபுணர்கள் பங்கேற்றனர். மருத்துவ நிபுணர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பரிசோதித்து, உரிய ஆலோசனைகளை அளித்தனர். இந்த முகாமை மாவட்ட சுகாதாரத்துறை குடும்பநல இணை இயக்குனர் இளங்கோவன் பார்வையிட்டார், அவருடன் திருத்தணி மாவட்ட கல்வி அலுவலர் அருளரசு, மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அம்பிகா ஷீலா ஜான்சிராணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த முகாம்களில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பரிசோதனை செய்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக தேசிய அடையாள அட்டை மற்றும் கண்ணாடி, காதொலி கருவி, சக்கர நாற்காலி, மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் போன்றவை வழங்க பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.