தூத்துக்குடி வடக்குகடற்கரையில் தூர்வாரி படகுதளம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை

தூத்துக்குடி வடக்குகடற்கரையில் தூர்வாரி படகுதளம் அமைக்க பைபர் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2022-03-14 13:53 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் படகுகள் தரைதட்டுவதால், அப்பகுதியில் தூர்வாரி படகுதளம் அமைக்க வேண்டும் என பைபர் படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
 தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமையில் நடந்தது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளிடம் மனுக்களை அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதி மக்கள் டாக்டர் அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் கே.சி.துரை, செயலாளர் டி.ராஜ் ஆகியோர் தலைமையில் அளித்த மனுவில்,  எட்டயபுரம் தாலுகாவில் வசிக்கும் சொந்தமாக நிலம் மற்றும் வீடு இல்லாத மிகவும் பிற்படுத்தப்பட்ட, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
மேலும் எட்டயபுரம் பைபாஸ் காலனி துர்க்கையம்மன் கோவில் தெரு, காட்டுநாயக்கன் தெரு ஆகிய பகுதிகளில் சுமார் 100 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு இதுவரை அரசு பட்டா வழங்கவில்லை. எனவே அந்த மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு
சமூக சேவகர் மச்சேந்திரன் கொடுத்துள்ள மனுவில் சாயர்புரம் டவுன் பஞ்சாயத்தில் பேய்குளம், கடலோடி பண்ணை, இருவப்புரம், சோலைப்புதூர், பெத்தநாட்சிபுரம் சாயர்புரம் உட்பட பல ஊர்கள் உள்ளன. 
இந்த ஊர்களிலுள்ள பெரும்பாலான குடியிருப்புகளுக்கு 20 ஆண்டுகளாக குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. 
எனவே இதுவரை குடிநீர் இணைப்பு கிடைக்காத வீடுகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதுபோல் சமூக ஆர்வலர் கண்ணன் கொடுத்துள்ள மனுவில் மேலதிருச்செந்தூர் கிராம ஊராட்சிக்கு தனி கிராம நிர்வாக அலுவலர் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சான்று பெற திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலகம் வரும் நிலை உள்ளது. எனவே மேலதிருச்செந்தூர் கிராம பொதுமக்கள் நலன்கருதி  தனி கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
படகுதளம்
தூத்துக்குடி மாவட்ட சிந்தாயாத்திரை மாதா பைபர் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க தலைவர் கே.ஆல்ரின் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை அண்ணா காலனி பகுதியில் சுமார் 100 பைபர் நாட்டுப் படகுகள் உள்ளன. இந்த படகுகள் கடலுக்கு செல்லும்போதும், கரைக்கு திரும்பும்போதும் படகுகளின் அடிப்பாகம் தரை தட்டுகிறது. 
எனவே இந்த பகுதியில் தூர்வாரி படகு தளம் அமைத்து தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் செவுள்வலை விசைப்படகு உரிமையாளர் நலச்சங்கத்தினர் தலைவர் எம்.இசக்கிமுத்து தலைமையில் அளித்த மனுவில், தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையை சேர்ந்த 3 பேர் தமிழக அரசின் 50 சதவீத மானிய உதவியை பெற்று செவுள் வலை படகு வைத்து கடந்த 2 ஆண்டுகளாக தொழில் செய்து வருகின்றனர். 
அவர்களது படகுகளை நிறுத்த தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் மற்றும் தருவைகுளத்தில் அனுமதி அளிக்க மறுக்கின்றனர். 
இதனால் அவர்கள் மூக்கூர், கொச்சி, தேங்காய்பட்டணம் போன்ற இடங்களில் தங்கள் படகுகளை நிறுத்தி தொழில் செய்கின்றனர். எனவே, இந்த படகுகளை நிறுத்தும் வகையில் திரேஸ்புரம் கடற்கரையை ஆழப்படுத்தி படகு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ரெஸ்மி என்ற பெண் தனது குழந்தைகளுடன் வந்து அளித்த மனுவில், எனது கணவர் மெல்வின் சங்குகுளி தொழில் செய்த போது கடந்த 27.3.2019 அன்று உயிரிழந்தார். 
இதை தொடர்ந்து ஆதரவற்ற விதவை சான்று கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். எனது விண்ணப்பத்தை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். எனக்கு சொந்தமாக வீடோ, நிலமோ கிடையாது. ஆண் வாரிசும் இல்லை. 2 பெண் குழந்தைகள் தான் உள்ளனர். எனவே வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறும் பொருட்டு எனக்கு ஆதரவற்ற விதவை சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்
காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட ரத்தினபுரியில் குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் உயிருக்கு ஆபத்தான தனியார் எரிவாயு கேஸ் குடோன் செயல்பட்டு வருகிறது. 
இதனால் அந்த பகுதியில் வாழுகின்ற மக்கள் அச்சத்துடன் வசித்துவருகின்றனர். எனவே எரிவாய்வு கேஸ் குடோனை உடனே அகற்ற வேண்டும் என்று கூறி தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனுகொடுத்தனர்.

மேலும் செய்திகள்