கோவில்களில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

கோவில்களில் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-13 22:34 GMT
அரியலூர்:

கொலை செய்ய முயற்சி
அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, பொன்பரப்பி குடிகாடு அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம். இவரது மகன் தமிழ்பாரதி (வயது 22). முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று அரியலூர்-செந்துறை சாலை ரவுண்டானா அருகே தனக்கு முன்னால் சென்ற மத்துமடக்கியை சேர்ந்த சந்திரசேகர் மீது காரை மோதி கொலை செய்ய முயன்றதாக தமிழ்பாரதியை அரியலூர் போலீசார் பிடித்து, அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தமிழ்பாரதி, குவாகம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் உள்ள மதுரகாளியம்மன் கோவில், திரவுபதி அம்மன் கோவில் மற்றும் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் பச்சையம்மன் கோவில் ஆகிய கோவில்களில் உண்டியல் பணம், நகைகளை திருடியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கைது
இதையடுத்து தமிழ்பாரதி மீது அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். இதையடுத்து அவரை அரியலூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரிடம் இருந்து சில்லரையாக இருந்த ரூ.4 ஆயிரம், அம்மன் கழுத்தில் அணியும் 8 கிராம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை போலீசார் கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்