மல்லூர் அருகே துணிகரம்:ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 19 பவுன் நகை திருட்டு-கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 19 பவுன் நகை திருடப்பட்டது. கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பனமரத்துப்பட்டி:
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் வீட்டில் 19 பவுன் நகை திருடப்பட்டது. கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
மல்லூர் அருகே நடந்த இந்த துணிகர திருட்டு பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஓய்வு பெற்ற வங்கி மேலாளர்
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே தாசநாயக்கன்பட்டியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் வசித்து வருபவர் இந்திராணி. (வயது 70). தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய கணவர் சவுந்தரராஜன். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இந்திராணி, தன்னுடைய தங்கை சித்ரா, தம்பி சீனிவாசன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்திராணி தன்னுடைய குடும்பத்தினருடன் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பிய போது, வீட்டின் இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
19 பவுன் நகை திருட்டு
வீட்டுக்குள் சென்று பார்த்த போது கதவுகளும் உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த இந்திராணி, வீட்டில் இருந்த நகைகளை பார்த்தார். ஆனால் 19 பவுன் நகைகளையும், ரூ.20 ஆயிரத்தையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. தகவல் அறிந்த சேலம் ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தையல்நாயகி, மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவுகள், பீரோவில் பதிவாகி இருந்த திருடர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
பரபரப்பு
இந்த திருட்டு சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். ஓய்வு பெற்ற பெண் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.