தெருநாய் கடித்து 2 வயது குழந்தை பரிதாப சாவு ‘மருமகளை பழிவாங்க நினைத்து சம்பவம் பற்றி வெளியே சொல்லாமல் இருந்த பெண்’

துமகூரு அருகே 2 வயது பெண் குழந்தையை தெருநாய் கடித்திருந்தது. ஆனால் தனது மருமகளை பழிவாங்க நினைத்த பெண், பேத்தியை நாய் கடித்தது குறித்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது

Update: 2022-03-13 21:03 GMT
துமகூரு: துமகூரு அருகே 2 வயது பெண் குழந்தையை தெருநாய் கடித்திருந்தது. ஆனால் தனது மருமகளை பழிவாங்க நினைத்த பெண், பேத்தியை நாய் கடித்தது குறித்து வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இதனால் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. 

மருமகளுடன் தகராறு

துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா சாசலு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயம்மா. இவரது மகன் புட்டராஜு. இவருக்கும், சிக்கம்மா என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் திரிஷா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் மாமியார் ஜெயம்மாவுக்கும், மருமகள் சிக்கம்மாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 
இதனால் ஜெயம்மா, தனது மருமகள் சிக்கம்மா மீது கடும் கோபத்தில் இருந்து வந்தார். இந்தநிலையில் கடந்த மாதம் ஜெயம்மா, தனது பசுமாட்டை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவர் தனது பேத்தி திரிஷாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றார். 

குழந்தையை தெருநாய் கடித்தது

அந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த தெருநாய், குழந்தை திரிஷாவையும், பசுமாட்டையும் கடித்து குதறியது. தனது மருமகள் மீது இருந்த ஆத்திரத்தில் அவரை பழிவாங்க நினைத்த ஜெயம்மா, குழந்தையை தெருநாய் கடித்தது பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நாய் கடித்த 5 நாட்களில் பசுமாடு உடல்நலக்குறைவு ஏற்பட்டு செத்தது. 

இந்த நிலையில் நாய் கடித்த 40 நாட்கள் கழித்து குழந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து புட்டராஜுவும், சிக்கம்மாவும் குழந்தை திரிஷாவை மீட்டு சிகிச்சைக்காக குனிகல் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தையை நாய் அல்லது பூனை போன்ற விலங்கு கடித்திருக்கும் என்று கூறினர். 

போலீஸ் விசாரணை

அதையடுத்து அவர்கள், ஜெயம்மாவிடம் விசாரித்தபோது குழந்தையை தெருநாய் கடித்ததையும், மருமகள் மீது இருந்த ஆத்திரத்தில் அதை யாரிடமும் சொல்லாமல் மறைத்ததையும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். 

இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை திரிஷா பரிதாபமாக இறந்தாள். இதுபற்றி குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்