கர்நாடக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடக்காது- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திட்டவட்டம்

மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என்றும், கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். இதனால் கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்

Update: 2022-03-13 20:23 GMT
பெங்களூரு: மந்திரிசபை விரிவாக்கம் தற்போதைக்கு இல்லை என்றும், கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும் என்றும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார். இதனால் கர்நாடகத்தில் முன்கூட்டியே சட்டசபை தேர்தல் நடக்காது என்றும் அவர் தெரிவித்தார். 

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல்

கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலேயே அடுத்த ஆண்டு(2023) நடைபெறும் கர்நாடக சட்டசபை தேர்தல் சந்திக்கப்படும் என்று பா.ஜனதா மேலிடம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இதனால் கர்நாடக பா.ஜனதா தலைவர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். 5 மாநில தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றிருப்பதால், வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் குஜராத் மாநில சட்டசபை தேர்தலுடன் கர்நாடகத்திற்கும் முன்கூட்டியே தேர்தல் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. அதாவது கர்நாடக சட்டசபையை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை சந்திக்க பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது.

காங்கிரஸ் தயார்

அடுத்த ஆண்டுக்கு பதிலாக முன்கூட்டியே தேர்தலை சந்தித்தால், கர்நாடகத்தில் மீ்ணடும் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பா.ஜனதா தலைவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடந்தால், அதனை சந்திக்க காங்கிரஸ் கட்சியும் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

முன்கூட்டியே தேர்தல் இல்லை

உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 5 மாநில தேர்தல் முடிவுகள் கர்நாடக சட்டசபை தேர்தலிலும் பிரதிபலிக்கும் என்று ஏற்கனவே நான் கூறி இருந்தேன். ஆனால் கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறுவது இல்லை. அதற்கான சாத்தியமும் இல்லை.

கா்நாடகத்தில் பா.ஜனதா அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும். கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து பா.ஜனதாவுக்குள் இதுவரை எந்த விதமான ஆலோசனையும் நடைபெறவில்லை. கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த இருப்பதாக வரும் தகவல்கள் அனைத்தும் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி மட்டுமே. இதுபற்றி பத்திரிகையாளர்கள் தான் பேசி வருகிறீர்கள்.

கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள்

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், வேறு கட்சிக்கு செல்ல இருப்பதாக வரும் தகவல்களும் உண்மை இல்லை. பா.ஜனதாவை சேர்ந்த யாரும் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள். இதற்கு முன்பும் பா.ஜனதாவினர் யாரும் வேறு கட்சிக்கு சென்றதில்லை. இனியும் அதுபோன்று செல்ல மாட்டார்கள். எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட அனைவரும் பா.ஜனதா கட்சியிலேயே இருப்பாா்கள். இதனை உறுதியாக சொல்கிறேன்.

பா.ஜனதாவை சேர்ந்த எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் வேறு கட்சிக்கு செல்வதில்லை. பிற கட்சியை சோ்ந்தவர்கள் வேண்டுமானால், பா.ஜனதா கட்சிக்கு வருவார்கள். அவர்கள் யார்? என்பது பற்றி தற்போது தெரிவிக்க விரும்பவில்லை. அவர்கள் பா.ஜனதாவில் சேரும் போது அறிந்து கொள்வீர்கள். அவர் கட்சியை விட்டு செல்கிறார், இவர் செல்கிறார் என்பதெல்லாம் வெறும் வதந்திகள் மட்டுமே.

மந்திரி சபையை மாற்றியமைப்பது...

5 மாநில தேர்தல் முடிந்திருப்பதால் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது அல்லது மாற்றியமைப்பது குறித்து பா.ஜனதா மேலிட தலைவர்கள் முடிவு செய்வாா்கள். என்னை டெல்லிக்கு வரும்படி தலைவர்கள் அழைத்தால் செல்வேன். தற்சமயம் வரை மந்திரிசபை விரிவாக்கம் பற்றி பா.ஜனதா மேலிட தலைவர்களிடம் இருந்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. டெல்லிக்கு வரும்படியும் அழைக்கவில்லை. வருகிற 30 மற்றும் 31-ந் தேதிகளில் கர்நாடக பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலையொட்டி கட்சியை பலப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொள்வது, கட்சியை வளர்ப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற இருக்கிறது. உக்ரைனில் சிக்கிய கன்னடர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறார்கள். 90 சதவீதம் பேர் கா்நாடகம் திரும்பி வந்துள்ளனர். போரின் போது பலியான மாணவர் நவீனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்