மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
நாகர்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூரை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு நடந்து சென்றார். தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக செல்வம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே செல்வத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது யார்? என்ற விவரம் தெரியாமல் உள்ளது. எனவே இந்த விபத்து பற்றி நாகர்கோவில் கோட்டார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.