கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், கல்லுப்பட்டியில் முருகன், விநாயகர், பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

கறம்பக்குடி, ஆவுடையார்கோவில், கல்லுப்பட்டியில் முருகன், விநாயகர், பகவதி அம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-03-13 18:35 GMT
கறம்பக்குடி:
முருகன் கோவில் கும்பாபிஷேகம் 
கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் முருகன் கோவில் உள்ளது. இங்கு ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக கணபதி ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார் பணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. 
நேற்று காலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடம் புறப்பாடு தொடங்கியது. சிவாச்சாரியார்கள் புனிதநீர் அடங்கிய கலசங்களை தலையில் சுமந்தப்படி கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் முருகன் கோவில் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அப்போது பக்தர்கள் அரோகரா... அரோகரா... என பக்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
அன்னதானம் 
இதைத்தொடர்ந்து முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் கறம்பக்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கறம்பக்குடி பழனி பாதயாத்திரை குழு நிர்வாகிகள் செய்திருந்தனர். கறம்பக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விநாயகர் கோவில்கள் 
ஆவுடையார்கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சீராட்டு ஊரணி கரை மனு விநாயகர் கோவில், அடியார்குளம், தென்கரையில் சிந்தாமணி விநாயகர் கோவில், ஆவுடையார்கோவில் வடநகர் தொன்ற வேலி குளக்கரையில் வட நகர் சாலையில் உள்ள பள்ளிக்கூட விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த மூன்று கோவில்களிலும் 3 கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. 
இதையடுத்து நேற்று 3 கோவில்களில் மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தில் திருவாவடுதுறை ஆதினம் 24-வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் மற்றும் காறுபாறுவைத்தியநாத தம்பிரான் மற்றும் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமிகோவில் நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
பகவதி அம்மன்
விராலிமலை தாலுகா, பேராம்பூர் ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டியில் பகவதி அம்மன், பாலகணபதி, சுப்பிரமணியர் சுவாமி ஆகிய தெய்வங்கள் சன்னதி தனித்தனியே உள்ளது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் காலை கோவில் முன்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது.  தொடர்ந்து நேற்று 10 மணியளவில் யாகசாலை கூடத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் தலையில் சுமந்தவாறு மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோபுரத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பகவதி அம்மன், பாலகணபதி, சுப்பிரமணியர் சுவாமி ஆகிய தெய்வங்களின் மூலஸ்தான கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 
பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. மற்றும் பேராம்பூர், மலம்பட்டி, கல்லுப்பட்டி, விராலிமலை, நீர்பழனி, மாத்தூர், ஆலங்குளம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லுப்பட்டி கிராம மக்கள் மற்றும் ஆயக்கட்டுத்தாரர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்