அகழாய்வு பகுதிகளை காண பொதுமக்கள் ஆர்வம்

கீழடியில் அகழாய்வு பகுதிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

Update: 2022-03-13 18:22 GMT
திருப்புவனம், 

கீழடியில் அகழாய்வு பகுதிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

அகழ்வாராய்ச்சி

திருப்புவனம் யூனியனை சேர்ந்தது கீழடி ஊராட்சி. இந்த ஊராட்சி பகுதியில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று உள்ளது. கடந்த வருடம் வரை 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. தற்சமயம் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் இந்த வருடம் பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 
7-ம் கட்டத்தில் பணிகள் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. இதில் கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளில் பொருட்கள் அதிகம் கிடைத்துள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் கிடைத்த பொருட்கள் பற்றிய விவரங்கள் அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடங்களிலேயே பெரிய அளவில் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். 
கீழடியில் 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின்போது சேதமுற்ற சிறிய-பெரிய பானைகள், மண்பாண்ட ஓடுகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுக்கள், யானை தந்த தாயக்கட்டை, பெண்கள் காதில் அணியும் தங்க ஆபரணம், நூல் நூற்க பயன்படும் தக்களி என்னும் சிறு கருவி, மண்ணாலான விவசாய கருவிகள், பழங்கால கண்ணாடி மணிகள், விதவித மான எடைக்கற்கள், சுடுமண் பாசிமணிகள், சுடுமண் உறைகிணறு, வெள்ளி நாணயம், சுடுமண் முத்திரைகள், சுடுமண் ஆட்டக்காய்கள், பெரிய பானைகள் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
 கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்திலேயே இரும்பினாலான செட் போடப்பட்டு திறந்தவெளி அருங் காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் உறைகிணறு, பெரிய பானைகள் உள்பட பல பொருட்கள் குழியிலேயே உள்ளது. சிறிய பொருட்கள் கிடைத்த விவரம் பிளக்ஸ் போர்டில் வைத்துள்ளனர். கீழடியில் தினமும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என உள்ளூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 

போலீஸ் பாதுகாப்பு

சிலர் பிளக்ஸ் போர்டு முன்பு நின்று போட்டோ, செல்பி எடுத்துக் கொள்கின்றனர். சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் அதிக மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். 
திறந்தவெளி அருங்காட்சியகத்தில் பார்வை யாளர்கள் குழிக்குள் இறங்காதவாறு தினமும் காலை முதல் மாலை வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திறந்த வெளி அருங்காட்சியகத்தில் இருந்து சிறிது தூரத்தில் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்