விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும்

விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வேளாண் பட்ஜெட் அமையும் என்று கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

Update: 2022-03-13 17:35 GMT
கடலூர், 

வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தனர். தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

தனி பட்ஜெட்

விவசாயிகள் போராட வாய்ப்பு வழங்காத நிலையில் இந்த ஆட்சி நடந்து வருகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது. 22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.4500 கோடியில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டது.
தற்போது 1 லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது. விவசாயத்திற்கு தனி பட்ஜெட் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும்.

பயிற்சி

எம்.ஆர்.கே.கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனால் தொழிற்சாலை அமைய இருக்கிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் எத்தனால் தொழிற்சாலை அமைப்பதற்கு ரூ.116 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கும். விவசாயிகள் தங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த, ஏற்றுமதி செய்ய அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். ஆகவே இந்த பட்ஜெட் விவசாயிகள் பாராட்டும் வகையில் அமையும். இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வேளாண்மை வளர்ச்சி திட்டம்

விவசாயிகளின் கருத்துகளை கேட்டு வேளாண்மை பட்ஜெட் தயாரிக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்த, புதிய வேளாண் கருவிகள் தயார் செய்து தர வேண்டும் போன்ற கருத்துகளை கூறினார்கள். முந்திரி குளிர்பதன கிடங்கு, பலாப்பழத்தை மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த கடந்த பட்ஜெட்டில் அறிவித்தோம். தற்போது இதை செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 1997 ஊராட்சிகளில் இந்த திட்டம் தொடங்கப்படுகிறது. இதில் வேளாண் சார்ந்த அனைத்து திட்டங்களும் முழுமையாக ஊரக வளர்ச்சி துறை மூலம் செயல்படுத்தப்படும். விவசாயத்திற்கு தேவையான நீர் ஆதாரம், காய்கறி உற்பத்தி மேம்படுத்தப்படும். இயற்கை வேளாண்மை, விவசாய பொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் எந்திரமயமாக்கல் செயல்படுத்தப்படும்.

உழவர் சந்தைகள்

தமிழகம் முழுவதும் 180 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும். இந்த திட்டங்கள் அனைத்தும் செயல்பட்டால், வருகிற 5 ஆண்டு முடிவடைவதற்குள் தமிழகத்தில் பசுமைப்புரட்சி ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

மேலும் செய்திகள்