சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.
கடலூர்,
சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்ட கலெக் டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், வனத்துறை அலுவலர்களுக்கான 3 நாட்கள் மாநாடு முடிவடைந்தது. இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். குறிப்பாக குற்றம் நடக்காமல் தடுக்க வேண்டும். ரவுடிகளுக்கு உடந்தையாக அதிகாரிகள் இருக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
நடவடிக்கை
கடலூர் மாவட்டத்தில் ரவுடிகளை ஒழிக்க ஏற்கனவே தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுச்சேரியில் உள்ள ரவுடிகள் கடலூர் மாவட்டத்திற்கு வந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார் களா? என்று கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சோதனைச்சாவடிகள் அமைத்தும் 24 மணி நேரம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். ஆகவே கடலூர் மாவட்டத்தில் யாரேனும் சமூக விரோத செயலில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்தி வருவோர் மீதும் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கூடங்களுக்கு அருகில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் கூறினார்.