கிருஷ்ணகிரியில் மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம் இணைந்து நடத்தும் விடுதியில் தங்கி பயிலும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரி அடுத்த ஜாகீர்வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் கலந்து கொண்டார். மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம், 12-ம் வகுப்புக்கு பிறகு உள்ள படிப்புகள் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கி பேசினார். பொதுத்தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வது குறித்து ஆசிரியர்கள் மரியஆனந்தி, வெண்ணிலா, கவிதா ஆகியோர் பேசினர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்பு மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிவியல் ஆசிரியர் சங்கர் விளக்கி கூறினார். இதில் கிருஷ்ணகிரி ஒன்றிய அளவில் 10 அரசு பள்ளிகளில் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமையாசிரியர் ஜெயபால் வரவேற்றார். முடிவில் விடுதி காப்பாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.