திருட்டுகளை தடுக்க வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம்

திருட்டுகளை தடுக்க வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் என துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார்.

Update: 2022-03-13 18:45 GMT
வெளிப்பாளையம்:-

திருட்டுகளை தடுக்க வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது அவசியம் என துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கூறினார். 

விழிப்புணர்வு கூட்டம்

நாகை இந்திய வர்த்தக தொழிற் குழும கூட்ட அரங்கில் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு இந்திய வர்த்தக தொழிற் குழுமத்தின் தலைவர் சலிம்முதின் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நாகை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நாளுக்கு நாள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் வணிக நிறுவனங்களில் நூதன முறையில் திருட்டு சம்பவங்களும் நடந்து வருவதாக புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது. 

கண்காணிப்பு கேமரா அவசியம்

இரவு நேரங்களில் கடைகளை பூட்டி விட்டு சென்றவுடன் மர்ம நபர்கள் நூதன முறையில் பொருட்களை திருடி சென்று விடுகின்றனர். அதே போல் இரவு நேரங்களில் விபத்துகளை ஏற்படுத்தி விட்டு வாகனங்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. 
திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்கு வணிக வளாங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டியது அவசியமானதாகும். கேமராக்கள் மூலமாக வணிகர்கள் தங்கள் நிறுவனத்தை எப்போதும், எங்கு இருந்தாலும் கண்காணிக்கலாம். எனவே அனைவரும் அவசியம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 
இதில் வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், மருந்து, வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் டவுன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்