‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 9962818888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடைபாதை ஆக்கிரமிப்பு
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் கிளை நூலகம் வரை உள்ள குறுகிய சாலையில் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல இண்டர் லாக் நடைபாதை அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நடைபாதை யில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவதால் நடைபாதை சேதமடைந்து உள்ளது. அத்துடன் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி அதில் பொதுமக்கள் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
ஜான்சன், கோத்தகிரி.
அடிக்கடி மின்தடை
கூடலூர் தாலுகா கீழ் நாடுகாணி, நாடுகாணி, அண்ணாநகர் உள்பட பல கிராமங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் கண்டுகொள்வது இல்லை. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் இரவு நேரத்தில் முதியோர், குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும்.
அப்துல் ரசாக், நாடுகாணி.
வாகன ஓட்டிகள் அவதி
கோவை ரெயில் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வரை செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், பொதுமக்கள் மற்றும் வகான ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
ரகமத்துல்லா, புலியகுளம்.
குடிநீர் குழாயில் உடைப்பு
சுல்தான்பேட்டை ஒன்றியம் உடுமலை ரோட்டில் உள்ள செஞ்சேரிப் புத்தூர் ஊராட்சி பகுதியில் அடிக்கடி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதுடன் உடைந்தகுழாய் சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திற்கும் அடிக்கடி செலவாகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண குடிநீர் வடிகால் வாரியம் செஞ்சேரி புத்தூர் பகுதியில் பழைய குடிநீர் குழாய்களை அகற்றி தரமான புதிய குடிநீர் குழாய்களை பதிக்க எடுக்க வேண்டும்.
பழனிசாமி, செஞ்சேரிப்புத்தூர்.
ஊருக்குள் பஸ்கள் வருமா?
கோவையில் இருந்து கிணத்துக்கடவு வழியாக தென் மாவட்டங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் கிணத்துக் கடவு ஊருக்குள் வராமல் மேம்பாலம் வழியாக சென்றுவிடுகிறது. இதனால் கிணத்துக்கடவில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்ல காத்திருக்கும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிணத்துக்கடவு வழியாக செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் கிணத்துக்கடவு ஊருக்குள் வந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
துரைபாண்டியன், கிணத்துக்கடவு.
பாராக மாறிய நிழற்குடை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கரியாஞ்செட்டிபாளையம். இங்குள்ள பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டது. போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த நிழற்குடை தற்போது திறந்வெளி பாராக மாறி வருகிறது. இதனால் அதற்குள் காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டல்கள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. அதுபோன்று இங்கு ஒட்டப்பட்ட போஸ்டர்களும் கிழிந்து தொங்கி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணிக்கம், ஆனைமலை.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
காய்ந்த மரம் அகற்றப்பட்டது
கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அருகே சாலையோரத்தில் காய்ந்த மரம் நின்றது. இந்த மரம் எந்த நேரத்திலும் விழக்கூடிய நிலையில் இருந்ததால் அந்த வழியாக செல்பவர்கள் பயத்துடன் செல்லக்கூடிய நிலையில் இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்ைக எடுத்து ஆபத்தான அந்த மரத்தை அகற்றினார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மீனா இளங்கோவன், சிங்காநல்லூர்.
வேகத்தடை வேண்டும்
கோவை கணபதியில் உள்ள சங்கனூர் சாலையில் வாகனங்கள் அதிவேக மாக சென்று வருகின்றன. அத்துடன் சங்கனூர் பிரிவில் உள்ள சிக்னலில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிப்பது இல்லை. இதனால் எந்த நேரத்திலும் விபத்து ஏற்படக்கூடிய அபாய நிலை நீடித்து வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் ஆங்காங்கே வேகத்தடை அமைப்பதுடன், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சசிதரன், மதுக்கரை.
குண்டும் குழியுமான சாலை
கிணத்துக்கடவு அருகே உள்ள முத்துக்கவுண்டனூரில் இருந்து சொக்கனூர் செல்லும் சாலை பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கர்ப்பிணிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். அத்துடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
தருண், சொக்கனூர்.
போக்குவரத்து நெரிசல்
கோவை குனியமுத்தூர் மற்றும் கோவைப்புதூர் பகுதியில் தடை செய்யப்பட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் வருகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன், அடிக்கடி விபத்துகளும் நடந்து வருகிறது. இது தொடர்பாக புகார் தெரிவித்தாலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்ைக எடுத்து அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே கனரக வாகனங்களை அனுமதிக்க வேண்டும்.
அரசு, குனியமுத்தூர்.