ஆழியாற்றில் தண்ணீர் திருட்டு
ஆனைமலை அருகே ஆழியாற்றில் தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே ஆழியாற்றில் தண்ணீர் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தண்ணீர் திருட்டு
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஆழியாறு அணை உள்ளது. இந்த அணையில் இருந்து பாசனத்துக்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் கேரளாவிற்கு வழங்க வேண்டிய தண்ணீர் ஒப்பந்தப்படி மணக்கடவு பகுதியில் உள்ள தடுப்பணையில் இருந்து நீர் அளவீடு செய்தபிறகு திறந்து விடப்படுகிறது. இதற்கிடையில் இரவு நேரத்தில் ஆழியாற்றில் செல்லும் தண்ணீரை கரையோரத்தில் மோட்டார் பதித்து குழாய் மூலம் திருடுவது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரகசிய தகவல்
இந்த நிலையில் நேற்று திம்மங்குத்து பவர் ஹவுஸ் அருகே ஆழியாற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் திருடப்பட்டு, அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் சேமித்து வைப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்று அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது ஆழியாற்றில் இருந்து தண்ணீர் திருடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
எச்சரிக்கை
இதையடுத்து தண்ணீர் திருட பயன்படுத்திய மோட்டார், குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மணக்கடவு, ஆத்து பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அங்கு ஆற்றங்கரையோரத்தில் வைக்கப்பட்டு இருந்த மோட்டார்கள் மற்றும் குழாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் ஆழியாற்றில் தண்ணீர் திருடுவது சட்டப்படி குற்றம் ஆகும். இதை மீறி சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டால் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.