சாமந்தி பூ விளைச்சல் அமோகம்

கடலூர் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் அமோகமாகி, அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

Update: 2022-03-13 16:20 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் அரும்பு, மல்லிகை, ரோஜா, கோழிக்கொண்டை, சாமந்தி, கேந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கடலூர் அருகே உச்சிமேடு, ஞானமேடு, சுப உப்பலவாடி, கண்டக்காடு, ராமாபுரம், எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகப்படியான பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இது தவிர பண்ருட்டி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, வேப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் பெருமளவு பூக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு 1500 ஏக்கர் பரப்பளவில் பூக்களை சாகுபடி செய்து உள்ளனர்.

சாமந்தி பூ

இவை தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. கடலூர் பகுதியில் சாமந்தி பூக்கள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் போதிய விலை கிடைக்கவில்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இது பற்றி ஞானமேடு விவசாயி அரிராமன் கூறுகையில், கடலூர் பகுதியை பொறுத்தவரை உச்சிமேடு, ஞானமேடு, சுபஉப்பலவாடி, கண்டக்காடு ஆகிய பகுதியில் சாமந்தி பூக்களை அதிக அளவில் பயிரிடுவோம். ஆனால் இந்த ஆண்டு குறைந்த அளவில் தான் பூக்கள் சாகுபடி செய்து இருக்கிறோம்.

கொரோனா பரவல் காரணமாக மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வந்தால், பயிரிடப்பட்ட பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனால் எங்கள் பகுதியில் 5 ஏக்கர் மட்டும் தான் சாமந்தி பூ சாகுபடி செய்தோம். தற்போது அவை வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. சில இடங்களில் அறுவடையும் நடந்து வருகிறது. ஆனால் விலை போதுமானதாக இல்லை. ஒரு கிலோ 10 ரூபாய், 20 ரூபாய் வரைக்கும் தான் போகிறது. 30 ரூபாய்க்கு மேல் கிடைத்தால்தான் பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

மேலும் செய்திகள்