வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குழாய் உடைந்து சாலையில் ஆறாக ஓடிய குடிநீர்

வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் ஆறாக ஓடியது.

Update: 2022-03-13 15:55 GMT
பழனி:
பழனி இந்திராநகரில் உள்ள குடியிருப்புகளுக்கு நகராட்சி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று இந்திராநகர் புதுதாராபுரம் சாலை பகுதியில் குடிநீர் குழாய் உடைந்தது. இதனால் வெளியேறிய தண்ணீர் சாலை முழுவதும் ஆறாக ஓடியது. சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக தண்ணீர் வீணாக சென்றது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக நகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அந்த பகுதிக்கு தண்ணீர் செல்லும் வால்வு அடைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து குழாய் உடைப்பை சரிசெய்யும் பணியில் நகராட்சி  பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கோடை காலம் தொடங்கும் முன்பே பழனி பகுதியில் வெயில் வாட்டி வதைக்கிறது. மேலும் நீர்நிலைகள் வறண்டு வருகின்றன. இந்நிலையில் பழனியில் பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகும் சம்பவம் அடிக்கடி அரங்கேறுகிறது. எனவே  குழாய்களில் கசிவு ஏற்பட்டால் உடனடியாக அதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்