முள்ளி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வாகனங்கள் வர தடை
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் முள்ளி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஊட்டி
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் முள்ளி சோதனைச்சாவடி வழியாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
முள்ளி சோதனைச்சாவடி
நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்ல 3-வது மாற்று பாதையாக மஞ்சூர்-கோவை சாலை உள்ளது. கெத்தை, முள்ளி வழியாக காரமடைக்கு தார் சாலை செல்கிறது.
முள்ளி பகுதி தமிழக, கேரளா மாநில எல்லையில் உள்ளது. அங்கு வனத்துறை சோதனை சாவடி அமைத்து, வாகன சோதனைக்கு பின்னர் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
மன்னார்காடு, மலப்புரம், கண்ணனூர், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளா சுற்றுலா பயணிகள் சோதனைச்சாவடி வழியாக மஞ்சூர், ஊட்டிக்கு வருகை தருகின்றனர். குறிப்பாக இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வருவதை காணமுடிந்தது.
காட்டு யானைகள் நடமாட்டம்
அதேபோல் நீலகிரி, கோவையில் வசித்து வரும் மலையாள மொழி பேசும் மக்கள் முள்ளி வழியாக கேரளாவுக்கு சென்று வருகின்றனர்.
இந்த வழி இயற்கை அழகு நிறைந்த மலைப்பகுதி என்பதாலும், செல்லும் தூரம் குறைவாக இருப்பதாலும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே வனப்பகுதிகளில் ஏற்பட்ட வறட்சியால் முள்ளி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் இடம்பெயர்ந்து,
அதன் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக முள்ளி சோதனை சாவடி அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
சுற்றுலா பயணிகள் வர தடை
எனவே கேரளா சுற்றுலா பயணிகள் முள்ளி சோதனை சாவடி வழியாக ஊட்டிக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடியில் இருக்கும் வனத்துறையினர் திருப்பி அனுப்பி வைக்கிறார்கள்.
இதனால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வரும் கேரளா சுற்றுலா பயணிகள் சோதனை சாவடியிலேயே ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும், காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாலும் முள்ளி சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட வில்லை என்றார்.