வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் கோவில்வழி தற்காலிக பஸ் நிலையம் முன்பு பயணிகள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல்
விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த தினத்தையொட்டி நேற்று முன்தினம் திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அனைத்து பஸ் நிலையங்களிலும் அலைமோதியது. மாலை முதலே திருப்பூர் பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையத்தில் பயணிகள் அதிகளவில் கூடினர். ஆனால் முக்கிய தினமான கடந்த 2 நாட்களாக வெளியூர்களுக்கு போதிய அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. குறிப்பாக கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இரவு 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன.
அதன் பிறகு நள்ளிரவு நீண்ட நேரம் ஆகியும் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அதனால் குடும்பம், குழந்தைகளுடன் சொந்த ஊர்களுக்கு கிளம்பிய பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், வெளிமாவட்டங்களுக்கு போதிய பஸ்களை இயக்காத அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து திருப்பூர்-தாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் ஊரக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அரசு பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பஸ்களை விரைந்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து மறியலை கைவிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிகள் கிளம்பி செல்ல தொடங்கினர். இதனால் சுமார் 1 மணிநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
இதேபோல், நேற்று பகலில் பழைய பஸ் நிலையம், யுனிவர்செல் ரோடு, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஆனால் குறைந்த அளவில் இயக்கப்பட்ட டவுன் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறி இடம் பிடித்தனர். ஒரே நாளில் மாநகரில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல், பஸ்களில் அளவுக்கதிகமான கூட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை தினம், முக்கிய தினங்கள், சுபமுகூர்த்த தினம் ஆகிய நாட்களில் திருப்பூரில் இருந்து வெளியூர் செல்லும் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் பஸ் நிலையங்களில் திரள்வது வழக்கம். எனவே இதுபோன்ற தினங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.