சோமசமுத்திரம் கிராமத்தில் மதகு உடைக்கப்பட்டதால் தண்ணீர் வெளியேறி வறண்ட ஏரி
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் மதகு உடைக்கப்பட்டதால் தண்ணீர் வெளியேறி ஏரி வறண்டு காணப்படுகிறது.
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் மதகு உடைக்கப்பட்டதால் தண்ணீர் வெளியேறி ஏரி வறண்டு காணப்படுகிறது.
மதகு உடைப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த தொடர் கனமழை காரணமாகவும், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுன்டா அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் பெண்ணையாறு, பாலாற்றில் 118 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பின.
இந்தநிலையில் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட கல்பட்டு கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏரியின் மதகை உடைந்து தண்ணீரை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஊராட்சி நிர்வாகத்திற்கும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏரி வறண்டது
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முழு கொள்ளளவை எட்டியிருந்த ஏரி தற்போது தண்ணீர் வெளியேறி, ஏரியில் உள்ள பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் உள்ளது. உடைத்த மதகு பகுதியை சீரமைக்காததால் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. அதிகாரிகள் அலட்சியத்தால் ஏரியின் தண்ணீர் முழுவதுமாக வெளியேறி வருகிறது.
இது குறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து வீணாக வெளியேறி வரும் தண்ணீரை சேமிக்கும் விதமாக உடைத்த மதகுப் பகுதியை சீரமைக்க வேண்டும். முறையாக நடவடிக்கை எடுக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.